“நீதியின் குரல்: நீதிபதி கவாய் பேசுகிறார்” என்ற நூலினை குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டார்

“நீதியின் குரல்: நீதிபதி கவாய் பேசுகிறார்” என்ற நூலை குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (14.07.2026) வெளியிட்டார். பேராசிரியர் (டாக்டர்) எஸ். சிவகுமார் தொகுத்து, காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்துடன் இணைந்து தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த நூல், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் உரைகள், சொற்பொழிவுகள் மற்றும் சிந்தனைகளை உள்ளடக்கியது.

HNMMIOZbIAAm7bX 1024x561
HNMMIOZbYAAJwPE 1024x616
HNMM42DaUAE7Fd3 1024x547

விழாவில் பங்கேற்றோரிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், அனுபவத்தால் செதுக்கப்பட்ட நீதித்துறை சிந்தனை, அரசியல் சட்டக் கடமை , பொதுப் பொறுப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான ஆவணம் இந்த நூல் என குறிப்பிட்டார். அரசியலமைப்புவாதம், சட்டத்தின் ஆட்சி, சமூக நீதி, ஜனநாயக ஆட்சிமுறை ஆகியவற்றில் மதிப்புமிக்க கருத்துகளை வழங்குவதோடு, இந்தியாவில் அரசியலமைப்பு விவாதத்தையும் சட்டப் புலமையையும் இந்தத் தொகுப்பு வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

அரசியல் சட்டம் ஜனநாயக நிலைத்தன்மைக்கும் தேசிய ஒற்றுமைக்கும் அடித்தளமாகத் திகழ்கிறது என்றும், அதைத் திருத்துவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரம், மாறிவரும் காலங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் சட்ட ஆட்சிமுறையானது, சாமானிய மக்களின் விருப்பங்களுக்கும் மாறிவரும் சமூக எதார்த்தங்களுக்கும் செவிசாய்ப்பதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு தனிநபருக்கும் கண்ணியத்தை, வாய்ப்பை, நம்பிக்கையை உறுதி செய்ய , விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். நீதிபதி பி.ஆர். கவாய் நீதித்துறைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டிய திரு சி.பி. ராதாகிருஷ்ணன், அவரது நீதித்துறைப் பயணம் அரசியலமைப்பு விழுமியங்கள், நிறுவன சமநிலை, நீதி கிடைப்பதற்கான அணுகல் ஆகியவற்றின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த்; உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத்; உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்; காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் தலைவர் மற்றும் நூலாசிரியர், பேராசிரியர் (டாக்டர்) எஸ். சிவகுமார்; தாம்சன் ராய்ட்டர்ஸ் பதிப்பாளர் திரு கௌரி சங்கர் நடேசன் மற்றும் சட்டத் துறை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *